logo
நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமிக்கு நினைவு மணிமண்டபம் : முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்- அமைச்சர் மெய்யநாதன்

நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமிக்கு நினைவு மணிமண்டபம் : முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்- அமைச்சர் மெய்யநாதன்

30/Jul/2021 03:11:42

புதுக்கோட்டை, ஜூலை:  நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாருக்கு நினைவு மணிமண்டபம் அமைத்து , அரசு விழா எடுக்க முதல்வர் கவனத்துக் கொண்டு செல்லப்படும்  என்றார் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் பத்மபூஷண் டாக்டர்.முத்துலட்சுமி  அம்மையாரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை, மச்சுவாடியில்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில்  டாக்டர்.முத்துலட்சுமி உருவ சிலைக்கு, சுற்றுச்சூழல், ,காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்(30.07.2021) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், சமூக போராளி டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 136 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அந்த காலத்திலேயே பல்வேறு இன்னல்களுக்கு இடையே மருத்துவப் படிப்பை முடித்து, பல்வேறு சேவைகள் செய்து பன்முகம் கொண்டவராக திகழ்ந்தார். 

மேலும் 1972 -ஆம் ஆண்டு  முன்னாள் முதல்வர் கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது இங்கு நேரடியாக வருகை தந்து டாக்டர்.முத்துலட்சுமி  அம்மையாரின் சிறப்பை எடுத்துரைத்தார். இதேபோன்று  30.7.2010 அன்று தற்போதைய முதலமைச்சர்  ஸ்டாலின்,  டாக்டர்.முத்துலட்சுமி  அம்மையாரின் உருவச் சிலையினை இங்கு திறந்து வைத்தார். 

முன்னாள் முதல்வர் கலைஞரால்  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ.100 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையிலேயே, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டது. டாக்டர்.முத்துலட்சுமி  அம்மையாருக்கு நினைவு மணிமண்டபம் மற்றும் அரசு விழாவாக கொண்டாட முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஆதீனகர்த்தர் திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு.தயானந்த சந்திரசேகர சுவாமிகள், வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் க. நைனாமுகமது, எம்எம்.பாலு, சுப.சரவணன், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.


Top