logo
சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சைப்பெற்றுவந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை நகரச் செயலாளர்  எஸ்.பாபு மருத்துவமனையில் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சைப்பெற்றுவந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை நகரச் செயலாளர் எஸ்.பாபு மருத்துவமனையில் உயிரிழப்பு

24/Jul/2021 09:18:03

புதுக்கோட்டை, ஜூலை: சாலை விபத்தில் படுகாயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை நகரச் செயலாளர் எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை நகரச் செயலாளராக  செயல்பட்டவர் எஸ்.பாபு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினர். 20-க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்தார். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்திலும்  இவர் மீது வழக்குப் பதியப்பட்டது.


கஜா புயல், கொரோனா நோய்த் தொற்று காலங்களில் ஏழை, எளிய மக்களுக்காக களப்பணியாற்றியவர். எந்நேரமும் துடிப்புடன் செயல்பட்டுவந்த  பாபு புதன்கிழமை இரவு புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நேரிட்ட  சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாபு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை இரவு  உயிரிழந்தார்.

தோழர் பாபுவின் மறைவிற்கு  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா, தலைவர் ரெஜீஸ், மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் மற்றும் ஏராளமானோர் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் இரங்கல் தெரிவித்தனர்.

இறுதி ஊர்வலம் நல்லடக்கம்  ஞாயிற்றுக்கிழமை காலையில்  புதுக்கோட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து  நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Top