logo
ஈரோட்டு மாவட்டத்தில்  38 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது

ஈரோட்டு மாவட்டத்தில் 38 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது

21/Jul/2021 11:11:50

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்தது. கடந்த 38 நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இதைப்போல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 

இந்நிலையில், நேற்று கொரோனா தினசரி பாதிப்பு திடீரென உயர்ந்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 122 ஆக இருந்தது. நேற்று சுகாதார துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 129பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் பாதிப்பை விட கூடுதலாக 7 உயர்ந்துள்ளது.

இதனால், மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 92 ஆயிரத்து 189 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 208 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது.   மாவட்டத்தில்  கொரோனா தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 623 ஆக உள்ளது.

தற்போது மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 16பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்நாள் வரை குறைந்து வந்த தினசரி பாதிப்பு திடீரென உயர்ந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிக அளவு நடமாடி வருகின்றனர்.

 பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக பஸ்களில் 50 சதவீத பணிகள் மட்டுமே ஏற வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் தற்போது பஸ்களில் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் வீட்டை விட்டு வெளியே வரும் ஒரு சில மக்கள் முறையாக கவசம் அணிவது இல்லை என்பது வேதனைக்குரியது.

Top