logo
மேக்கேதாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சிப்பது, தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகும்: வைகோ

மேக்கேதாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சிப்பது, தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகும்: வைகோ

17/Jul/2021 01:10:16

மேக்கேதாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சிப்பது, தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். 

தில்லியில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் குழு 16.7.2021-இல்  சந்தித்தது. அப்போது, அமைச்சரிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்ததாவது:

மனித வாழ்க்கையின் உயிர்நாடி தண்ணீர் ஆகும். நதிகளை இணைக்க வலியுறுத்தி, நானும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், தமிழ்நாட்டில் நீண்ட நடைபயணங்களை மேற்கொண்டு பரப்புரை செய்தோம்.

நமது குடிஅரசின் முன்னாள் தலைவர், மறைந்த அப்துல் கலாம் அவர்கள், எதிர்காலத்தில் தண்ணீருக்காகத்தான் போர்கள் நடக்கும் என்று சொன்னதை, நினைவூட்ட விரும்புகின்றேன். மாநிலங்களுக்கு இடையே, தண்ணீருக்காக ஏற்பட்டுள்ள மோதல்களின் விளைவாகத்தான், அவர் அப்படிக் கூறினார்.  

இந்தப் பின்னணியில், மேகேதாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சிப்பது, தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகும். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுத்தால், இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறி விடும்; விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதி மக்கள் வேலை இழந்து விடுவார்கள்; வாழ்க்கை ஆதாரங்களை இழந்துவிடுவார்கள்.

எனவே, ஒன்றிய அரசு, கர்நாடகத்துக்கு ஆதரவாக இருந்தால், தமிழ்நாடு மட்டும் அல்ல; ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும். இந்தப் பிரச்னையை நாம் கூட்டாகச் சேர்ந்துதான் எதிர்கொள்ள வேண்டும். 

2020 ஆகஸ்ட் மாதம், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கர்நாடகத்தின் பாசனப் பரப்பை விரிவுபடுத்துவதே நமது நோக்கம்; அதற்காக, மேகே தாட்டுவில் அணை கட்டுவோம் என்று சொன்னார். 2020 செப்டெம்பர் மாதம், தில்லிக்கு வந்து, அணை கட்டுவதற்கு அனுமதி கோரினார்.


அதன் தொடர்ச்சியாக, 2020 நவம்பர் 18 -ஆம் நாள், அப்போதைய கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஜார்கிஹோலி, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் சென்று, ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களைச் சந்தித்து, அணை கட்ட ஒப்புதல் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதன்பிறகு, தனது ட்விட்டர் பதிவில், கர்நாடக மாநில நீர்த் திட்டங்களுக்கு, ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனக் குறிப்பிட்டார்.

அணை கட்டுவதற்காக, கர்நாடக அரசு ரூ 5000 கோடியை ஒதுக்கியது. பின்னர், திட்ட மதிப்பீட்டை 9000 கோடியாக உயர்த்தி இருக்கின்றது. ஏப்ரல் 14 -ஆம் நாள், மேக்கேதாட்டு பகுதியில், அணை கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டு இருப்பதாக, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் செய்தி வந்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தென்மண்டல அமர்வு, இந்தப் பிரச்னையைத் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டு, கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது. மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்க தீர்ப்பு ஆயத்திற்கு வருமாறு கர்நாடக அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

இது தொடர்பாக, விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இன்றி, மேக்கே தாட்டு அணையைக் கட்ட முடியாது என்று, அந்தக் குழு அறிக்கை தந்தது. ஆனால், தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம், தமிழ்நாடு அரசின் கருத்து எதையும் கேட்காமல், அவர்கள் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து விட்டது.

கர்நாடக மாநிலம், தனது பாசனப் பரப்பை, 11. 2 இலட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்று காவிரி நதிநீர் தீர்ப்புஆயம், இடைக்கால ஆணை பிறப்பித்து இருந்தது. ஆனால், கர்நாடகம், தனது பாசனப் பரப்பை, 18.85 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தி இருக்கின்றது.

அது மட்டும் அல்ல, உடனடியாக 21.1 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒட்டுமொத்தமாக 30 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை விரிவுபடுத்தவும் திட்டம் வகுத்து உள்ளனர். அதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல புதிய ஏரிகள், பாசன நீர்நிலைகளைப் புதிதாக அமைத்து உள்ளது.

1971 -ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் காவிரி பாசனப் பரப்பு 25.03 இலட்சம் ஏக்கராக இருந்தது; நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில், அதை 24.71 லட்சம் ஏக்கராகக் குறைத்துவிட்டது. அதுவும், தற்போது, 16 இலட்சம் ஏக்கராக சுருங்கி விட்டது.

இது, கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் சேர்ந்து நடத்துகின்ற கூட்டுச் சதி ஆகும். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் , தில்லிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, மேகே தாட்டு அணை கட்டக் கூடாது; அப்படிக் கட்டினால், தமிழ்நாட்டுக்குக் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்பதை எடுத்துக் கூறினார்.

மேகேதாட்டுவில் அணை கட்டினால், காவிரி நதிநீரில், தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கி, உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணை, வெறும் கானல் நீர் ஆகி விடும் என வைகோ அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.


Top