logo
 சூரம்பட்டி அணைக்கட்டுப் பகுதி அருகே ரூ.10 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா: ஈரோடு  மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் தகவல்

சூரம்பட்டி அணைக்கட்டுப் பகுதி அருகே ரூ.10 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா: ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் தகவல்

16/Jul/2021 11:50:37

ஈரோடு, ஜூலை: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் பல கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தற்போது வேகமெடுத்து உள்ளன.

இந்நிலையில், ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு அருகே ஸ்ரீ கார்டன் பகுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ .10 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு அருகே உள்ள ஸ்ரீ கார்டன் பகுதியில் ரூ .10 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா பிரம்மாண்ட முறையில் அமைக்கப்படுகிறது. 1.75 ஏக்கர் பரப்பளவில் இந்த அறிவியல் பூங்கா அமைக்கப் படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

இங்கு மாதிரி ராக்கெட், ராக்கெட் ஏவுதளம், டைனோசர், யானை சிலைகள், தாவரங்கள் அமைக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த பூங்கா அமைகிறது. ஏராளமான அறிவியல் சம்பந்தமான தகவல்கள் இடம் பெறும். இந்த கட்டுமான பணிகள் அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் முடிவடையும் என்றார்  அவர்

Top