logo
இடஒதுக்கீடுக்குக் காலகெடு விதிக்க முடியாது: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  வரவேற்பு

இடஒதுக்கீடுக்குக் காலகெடு விதிக்க முடியாது: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்பு

15/Jul/2021 11:27:28

சென்னை, ஜூலை: இடஒதுக்கீடுக்குக் காலகெடு விதிக்க வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கின்மீது தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இடஒதுக்கீடுக்குக் காலகெடு விதிக்க முடியாது என்று கூறியுள்ளதை திராவிடர் கழகம் வரவேற்றுள்ளது.

இது குறி்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டுக்கு காலகெடு நிர்ணயம் செய்து அறிவிக்கக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த (9.7.2021) ஒரு தெளிவான கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். இப்படி மனுதாரர் கோரியுள்ள வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் முன்னர் கூறியுள்ளதை எடுத்துக்காட்டியது பற்றிக் குறிப்பிடுகையில் அது அவரது கருத்தே தவிர, ஆணையோ, தீர்ப்போ அல்ல என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இரு வகையான இடஒதுக்கீடு இந்த இடஒதுக்கீடுபற்றி இப்படிப்பட்ட ஒரு குழப்பம் அல்லது குதர்க்கம் அடிக்கடி தலை தூக்குகின்றது. இதற்கு ஒரு முக்கிய காரணம் இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள இடஒதுக்கீடு - ரிசர்வேஷன் ஒரே வகையானது அல்ல என்பதைப் புரியாமல் பேசுவதே ஆகும்.

1. கல்வி - வேலை வாய்ப்புகளுக்கான இடஒதுக்கீடு. 2. அரசியல் தேர்தல் ரீதியான - இடஒதுக்கீடு.  அதாவது, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் S.C  என்பவர்களுக்கான பிரதிநிதித்துவம் பெற வழி வகை செய்யும் இடஒதுக்கீடு Reserved Constituencies - தொகுதிகள். 

இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின்படி, முந்தைய கல்வி, வேலை வாய்ப்புக்களுக்கான பிரிவுகளுக்கு கால நிர்ணயத்தை அரசமைப்புச் சட்டம் செய்யவில்லை. சமனப் படுத்தும் நிலை ஏற்படும் வரை - கல்வி, உத்தியோகங்களில் மேடும், பள்ளமும் சமமாகும் வரை இந்த இடஒதுக்கீடு தேவை என்பதே அதில் குறிப்பிட்டுள்ளதாகும்.

ஆனால் அரசமைப்புச் சட்டக் கர்த்தாக்கள் ரிசர்வ் தொகுதிகள் என்ற ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான தொகுதிகளுக்கு முதலில் 10 ஆண்டு என்று  கால நிர்ணயம் செய்தனர் பிறகு 1960-ஆம் ஆண்டு கால கட்டத்தில் மேலும் சில பத்தாண்டுகள் அதனை நீடிக்கும் நிலை மக்களாட்சியில் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்ததால், அதனை நீட்டித்து சட்டமியற்றி உள்ளனர். இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்வதால் சிலருக்கு இப்படி ஒரு சிந்தனை ஏற்படுகிறது போலும்.

பட்டியலின மக்களுக்கான சட்டமன்ற, நாடாளுமன்றத்துக்கான இடஒதுக்கீடு,  சலுகையல்ல - உரிமை சமூகநீதி கண்ணோட்டத்திலும், ஜனநாயகம் என்பதிலும் இடஒதுக்கீடு என்பது சில இடங்களை ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்தது போதும் என்று நினைக்காமல், மக்கள் தொகையின் ஒரு பகுதியான அவர்கள் அதிகாரப் பங்களிப்புக்கு உரியவர்கள் என்பதை நிலை நாட்டவே ஆகும்.

எனவேதான் இத்தகைய நீட்டிப்புகள் தேவைப்படுகின்றன; காரணம், அவர்கள் புழுவினும் கேடாய், பொட்டுப் பூச்சிகளாக, புன்மைத் தேரைகளாக நடத்தப்பட்டது மூவாயிரம் ஆண்டுகால சமூக அநீதி அல்லவா.அதிலிருந்து அவர்கள் மேலே ஏறுவது வெறும் 50,60,70 ஆண்டுகளிலே நடந்து விடும் என்று எதிர்ப்பார்ப்பது நியாயமல்ல என்பதுதான் இந்த அரசியல் இடஒதுக்கீடு நீட்டிப்பின் தேவையாகும்.

இது சலுகை அல்ல; அவர்களது உரிமை என்பதை புரியாதவர்களுக்கும் ஓங்கி அடித்துச் சொல்லி, புரிய வைக்க வேண்டியது. சமூகநீதிப் போராளிகளின் கடமையாகும். சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5லிருந்து 5 சதவிகிதமாக உயர்த்தி ஆணையிடுமாறு கோரிய வழக்கொன்றில் அதை  சட்டப்படி நீதிமன்றங்கள் செய்ய இயலாது என்பதை சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இடஒதுக்கீடு: முடிவு செய்வது அரசுகளே தவிர, நீதிமன்றம் அல்ல. இடஒதுக்கீடு அளவு பற்றியெல்லாம் முடிவு செய்யும் உரிமை, மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசுகளின் தனி உரிமையாகும். நடைமுறைகளின்படியும், அது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில,ஒன்றிய அரசுகளுக்கே உரியது.

நீதிமன்றங்கள், சட்டப்படி சரியாக வழங்கப்பட்டிருக்கிறதா? சட்டம் சரியாக அமலாக்கப்பட்டிருக்கிறதா? என்றுதான் கூற முடியும் என்பது உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்புகளிலேயே வலியுறுத்தப்பட்டு வழங்கப்பட்ட விளக்கம்தான்.இது மாநிலத்திற்கு மாநிலம் பல்வேறு கலாச்சாரம், மொழி, கல்வி வாய்ப்புக்கள், வளர்ச்சி இவற்றின் அளவுகோலைப் பொறுத்ததே.

100 விழுக்காடும் கொடுக்கலாமே.. 9 நீதிபதிகளைக் கொண்ட மண்டல் - இந்திரா சஹானி வழக்கில், வாதாடும்போது பிரபல வழக்குரைஞர் ராம் ஜெத்மலானியிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்படி வாதாடும் நீங்கள் 100 சதவிகித இடஒதுக்கீடுகூட கேட்பீர்களா  என்று ஒரு கேள்வி கேட்டனர்.  உடனே அவர் பளிச்சென்று சொன்னார். ஏன் தரக் கூடாது? 100 சதவிகித பழங்குடியினரே (S.T.) ஒரு மாநிலத்தில்  இருந்தால் அவர்களுக்கு 100 சதவிகிதம் தருவது எப்படித் தவறாகும்? என்று ஒரு வாதத்தை எடுத்து வைத்தார்.  (இது பதிவு ஆகியிருக்கிறது).

கிடைத்தது கைம்மண்  அளவு கிடைக்காதது உலகளவு. இதற்கே இப்படிப் பொருமலா. வேதனை. ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களே புரிந்து கொள்ளுங்கள் என்று  திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி  தெரிவித்துள்ளார்.


Top