logo
எம்ஜிஆரை நெகிழ வைத்த டிவிஆர்!

எம்ஜிஆரை நெகிழ வைத்த டிவிஆர்!

02/Oct/2020 09:13:24

எம்ஜிஆருக்கு தினமலர் இதழுடன் இருந்த நெருக்கம் பற்றிப் பலர், பல விதமாக விமர்சித்தது உண்டு. எம்ஜிஆர். தனது கட்சியை நிலை நிறுத்த, தமிழகமெங்கும், பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டிப் பேசிய எல்லா சுற்றுப்பயணங்களுக்கும், தினமலர் தனது சொந்த செலவில் தான் சென்றுள்ளது. முதல்வராக இருந்தபோதும், எம்ஜிஆரிடம் ஒரு சிறு சலுகையையும் தினமலர் கேட்டதே இல்லை.

உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றபோது, படம் குறித்து தினமலர் நாளிதழ் 50 பக்கங்களில் சிறப்பு மலர் வெளியிட வேண்டும் என எம்ஜிஆர் விரும்பினார். ரசிகர்கள் வாங்கும் விலையில் அந்த மலர் இருக்க வேண்டும் என்றும் நினைத்தார். எனவே, மலருக்கு தேவையான விளம்பரங்களை கொடுப்பதோடு, நஷ்டம் ஏற்பட்டால் ஈடு செய்யவும் எம்ஜிஆர் தயாராக இருந்தார். நிருபர்கள் மூலமாக தனது விருப்பத்தை டிவிஆர் அவர்களுக்கு எம்ஜிஆர் தெரிவித்தார்

எல்லா விரங்களையும் கேட்டுக் கொண்ட டிவிஆர் அவர்கள் சொன்னது: இது ஒரு புதிய முயற்சிதான். நீங்கள் எதிர்பார்ப்பது போல சாதனையும் கூட. தினமலர் இதழுக்கு நல்ல விளம்பரம். திரைப்படத்துறையின் சகல பகுதியினரும், தினமலர் நாளிதழை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். நமக்கு நஷ்டம் எதுவும் இல்லை.

இத்தனை இருந்தாலும், இப்படி ஒரு மலரை தினமலர் வெளியிடப் போவதில்லை. தனது ஒரு படம் குறித்து முழுமையான, உண்மையான ஒரு விமர்சனம் வெளிவர வேண்டும் என்ற எம்ஜிஆரின் ஆசை சரிதான். வேறு வகையில், இதனைப் பரிசீலிக்க வேண்டும்

உண்மையில் அவர் எடுத்துக் கொண்ட லட்சியத்திற்காக நாம் அவரை ஆதரிக்கிறோம். ஆதரவு என்பது இரு தரப்பிலும், லட்சிய அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு ரூபாய், அணா, பைசா என மதிப்பளிக்கத் தொடங்கினால், லட்சியம் செத்து விடும். மற்ற பத்திரிகைகளுக்கும், எம்ஜிஆர் இது போன்று மலர் தந்து இருப்பாராயின் அதை ஏற்கலாம். தினமலர் இதழுக்கு மட்டும் 50 பக்க மலர் வெளியிட்டால், இது மாதிரியான ஒரு எதிர்பார்ப்பில் தான், எம்ஜிஆரை, தினமலர் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடியது என்று, ஒரு தேவையில்லாத முத்திரை குத்த வாய்ப்பு ஏற்படும்

தினமலர் இதழுக்கு, தினமலர் என்ற முத்திரைதான் இருக்க வேண்டும்நம்மிடம் எம்ஜிஆர் காட்டிய அன்பிற்கு நன்றி கூறி, இதனை மறுத்து விடுங்கள். இப்படி சொல்லி அனுப்பிவிட்டார் டிவிஆர். இதனைக் கேட்ட எம்ஜிஆர் கூறியதுடி.வி.ராமசுப்பையர் இப்போது எனக்கு மிக மிக உயர்ந்த மனிதராகத் தெரிகிறார். பத்திரிகையாளர்கள் யாராலும், இப்படி ஒரு சந்தர்ப்பத்தைக் கைவிட முடியாது. அவருக்கு பணம் முக்கியமல்ல; லட்சியம்தான் முக்கியம். இப்படிப்பட்ட லட்சியவாதியான பெரியவரிடம், இன்று போல் கடைசிவரை மதிக்கப்பட வேண்டும் என்ற கவலை எனக்கு இப்போது வந்து விட்டது. நான் அப்படியே நடப்பேன் என அவரிடம் கூறுங்கள் என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார்.

(தினமலர் நாளிதழ் நிறுவனர்  டி.வி.ஆர் அவர்களின் பிறந்தநாளான இன்று (அக்டோபர் 2), அவரது வாழ்க்கை குறித்து தி. முத்துக்கிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை நூலில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு)

Top