logo
செட்டியாபட்டியில் 65 ஆண்டுகளாக விவசாயிகள் வைத்திருந்த நிலத்தை அபகரிக்க தனியார் முயற்சி: சிபிஎம் கண்டனம்

செட்டியாபட்டியில் 65 ஆண்டுகளாக விவசாயிகள் வைத்திருந்த நிலத்தை அபகரிக்க தனியார் முயற்சி: சிபிஎம் கண்டனம்

09/Jul/2021 09:22:48

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை அருகே செட்டியாபட்டியில் கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் உள்;ர் விவசாயிகளின் நிலத்தை தனியார் ஆக்கிரமிக்கும் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்  வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை தாலுகா, வடவாளம் ஊராட்சிக்குட்டது தெற்கு செட்டியாபட்டி. இங்குள்ள சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாப்பான் வயல் கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதி விவசாயிகளின் அனுபவத்தில் உள்ளது. மேற்படி இடத்திற்கு உழவடைப் பட்டா கேட்டு அப்பகுதி விவசாயிகள் கடந்த காலங்களில் அதிகாரிகளைச் சந்தித்து முயற்சி எடுத்து வந்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பிலும் இவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், மேற்படி இடத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் ஒருவர் போலி ஆவணங்களை தயார் செய்து அபகரிக்க முயற்சி எடுத்து வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், துணைத் தலைவர் எம்.சண்முகம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், நகரச் செயலாளர் எஸ்.பாபு ஆகியோர் அடங்கிய குழு சம்மந்தப்பட்ட நிலத்தையும், அப்பகுதி விவசாயிகளையும் சந்தித்து விசாரணை நடத்தியது.


விசாரணையில் மேற்படி நிலம் காலம் காலமாக உள்ளூர்  விவசாயிகளின் அனுபவத்திலேயே இருந்து வருகிறது என்பது தெளிவாகிறது. எனவே, மேற்படி நிலத்தை போலியாக ஆவனங்கள் தயார் செய்து தனியார் ஆக்கிரமிக்கும் முயற்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். காலம் காலமாக அந்த நிலத்தில் விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்கு உழவடைப்பட்டா வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 


Top