logo
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான கடன் திட்டங்கள்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான கடன் திட்டங்கள்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

09/Jul/2021 08:58:50

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதார மேம்பாடு அடைய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார  மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதார மேம்பாடு அடைய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புவோர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3,00,000 -க்கு மிகாமால் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

மேலும்  ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம், தனி நபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவிகிதத்திலிருந்து  8 சதவீதம்  வரை வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகப்பட்சமாக ரூ.2 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வட்டி விகிதம்  5 சதவீதம் ஆகும்.

 மேலும் சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது இதற்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் ஆகும்.  சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 இலட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது.  இதற்கான ஆண்டு வட்டி விகதம் 5 சதவீதம்  ஆகும். இரண்டு கறவை மாடுகள் வாங்க ரூ.60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம்  ஆகும். 

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். 

Top