logo
புதுக்கோட்டை நகராட்சிக்கு சிறப்பு குடிநீர்த்திட்டம்: அமைச்சர் நேருவிடம் எம்எல்ஏ-முத்துராஜா கோரிக்கை

புதுக்கோட்டை நகராட்சிக்கு சிறப்பு குடிநீர்த்திட்டம்: அமைச்சர் நேருவிடம் எம்எல்ஏ-முத்துராஜா கோரிக்கை

09/Jul/2021 12:57:47

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை நகராட்சியில் நீடிக்கும் குடிநீர்த்தட்டுப்பாட்டை போக்க சிறப்பு குடிநீர் திட்டம் கொண்டுவர வேண்டுமென உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு   தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் .டாக்டர்.வை.முத்துராஜா   கோரிக்கை வைத்தார்.

இது குறித்து எம்எல்ஏ-டாக்டர் வை. முத்துராஜா  கூறியதாவது:  2007-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி  காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.650 கோடி செலவில் தொடங்கி 3 மாவட்ட மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இத்திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை, திருமயம், திருப்பத்தூர், சிங்கம்புணரி, சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் வரையிலும் மேற்கே மாவட்டத்தின் கடைசி எல்லையான உச்சிநத்தம் வரையிலும் சிமெண்ட் குழாய்கள் மூலம் காவிரி குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இராமநாதபுரம் 4 நகராட்சி பகுதிகளுக்கு, 11 ஒன்றிய பகுதி மக்களுக்கும் சீரான முறையில் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,  முத்தரசநல்லூர் ஊராட்சியில்   தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்  சார்பில்  பராமரிக்கப்பட்டு வரும்  இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில்   புதுக்கோட்டை  கூட்டுக்குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முத்தரசநல்லூர் ஊராட்சியில்   தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்  சார்பில்  பராமரிக்கப்பட்டு வரும்  இராமநாதபுரம் கூட்டுக் குடிநீத்திட்டத்தில் தலைமை நீரேற்று நிலையம் மற்றும்   காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 4  நீர் சேகரிப்புக் கிணறுகள், தரைமட்ட  நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அதிலிருந்து பொருவாய் நீரேற்றும்   நிலையம் வரை குடிநீர் உந்து செய்யும்  மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் புதுக்கோட்டை  மாவட்டத்தைச் சோ்ந்த  பொன்னமராவதி பேரூராட்சி, விராலிமலை ஒன்றியத்தை சார்ந்த 17 குடியிருப்புகள், திருமயம் ஒன்றியத்தை சார்ந்த 10 குடியிருப்புகள் மற்றும் பொன்னமராவதி ஒன்றியத்தை 5 குடியிருப்புகள் காவிரி குடிநீர் வசதி பெறுகின்றன.

இதைத் தொடர்ந்து, ஜீயபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள  நீர் சேகரிப்பு கிணறு மற்றும் அதிலிருந்து நீருந்து செய்யும் 310 குதிரை சக்தி கொண்ட  பம்புசெட்  மூலம் புதுக்கோட்டை நகராட்சி அன்னவாசல், கீரனூர் மற்றம் இலுப்பூர் பேரூராட்சிகள் மற்றும் 15 வழியோர கிராமங்களுக்கு குடிநீர்  வசதி பெறுகின்றன. 

காவிரிக் கூட்டுக் குடிநீர்த்திட்டம் மூலம் இலுப்பூர், அன்னவாசல், கீரனூர் பேரூராட்சிகள் மற்றும் புதுக்கோட்டை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை தொட்டிகளில் நீர் சேமிக்கப்பட்டு தலைமை பணியிடம் மற்றும் 3  நீருந்து நிலையங்களிலும் உச்ச காலகட்ட தேவையை சமாளிக்கும் வகையில்  புதிய மின் மோட்டார்கள் கடந்த 2014 -இல் மாற்றி அமைக்கப்பட்டன.

இதன் பலனாக புதுக்கோட்டை நகராட்சி, இலுப்பூர், அன்னவாசல் மற்றும் கீரனூர் பேரூராட்சிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த 9 வழியோர குடியிருப்புகளுக்கும் போதிய அளவு குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வந்தது.

இதில், மிகப்பெரிய பகுதியான புதுக்கோட்டை நகராட்சிக்கு சுமார் 1.30 கோடி லிட்டர் குடிநீர் தினமும் வழங்கப்பட்டு வந்தது. அதனால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால், ஏறத்தாழ 7 ஆண்டுகளுப்பிறகு, தற்போது இந்த தட்டுப்பாடு  அதிகரித்துள்ளது.

வழியில் தண்ணீர்திருட்டு நடைபெறுகிறதா புதுக்கோட்டை நகராட்சிக்கு மட்டும் எவ்வளவு தண்ணீர்  கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்து புதுக்கோட்டை நகராட்சிப்பகுதிக்கு மட்டும் எவ்வித இடையூறுமின்றி தனியாக  குடிநீர்த்திட்டத்தை கொண்டு வரவேண்டுமென அமைச்சர் கே.என்.நேருவை தலைமைச்செயலகத்தில் நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா வலியுறுத்தினார். அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்றார்.


 

Top