logo
போக்குவரத்து ஊழியர்களிடம் அரசியல் பாகுபாடு காட்டாதீர்கள் : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்.

போக்குவரத்து ஊழியர்களிடம் அரசியல் பாகுபாடு காட்டாதீர்கள் : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்.

08/Jul/2021 01:09:15

சென்னை : அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழக ஊழியர்களுக்கு கட்சி வித்தியாசமின்றி பணிகளை ஒதுக்கவும்‌, பணியிட மாற்றம்‌, இலகுப்‌ பணி, பதவி உயர்வு உள்ளிட்டவையை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; 

மனித வாழ்க்கைக்கு உணவும்‌ உறைவிடமும்‌ போன்று போக்குவரத்தும்‌ இன்றியமையாதது என்று சொன்னால்‌ அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாத்‌ தன்மை வாய்ந்த போக்குவரத்தினை திறமையாகவும்‌. நேர்த்தியாகவும்‌. பாதுகாப்பாகவும்‌ வழங்குவது போக்குவரத்துக்‌ கழகங்களில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்கள்‌. தமிழகத்தில்‌ ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின்‌ காரணமாக அப்பாவி போக்குவரத்துத்‌ தொழிலாளர்கள்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌ என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சிக்‌ காலத்தில்‌, பழிவாங்கும்‌ நிலைமை என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழ்நிலை அரசு போக்குவரத்துக்‌ கழகங்களில்‌ நிலவியது. தொழிலாளர்கள்‌ எந்தச்‌ சங்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும்‌, அவர்களை இடமாறுதல்‌ செய்யாமல்‌ அவர்களுக்கு வழித்தட பணியாணை வழங்கப்பட்டதோடு, உடல்‌ நிலைக்‌ குன்றியவர்களுக்கு இலகுவான பணிகள்‌ வழங்கப்பட்டன.

இதன்‌ காரணமாக தி.மு.க. தொழிற்சங்கமான தொழிலாளர்‌ முன்னேற்றக்‌ சங்கத்தைச்‌ சார்ந்த உறுப்பினர்களும்‌ பயனடைந்தார்கள்‌. தொழிலாளர்களை தொழிலாளர்களாக பாவித்த அரசு அதிமுக அரசு.


ஆனால்‌, தொழிலாளர்களை அரசியல்‌ கண்ணோட்டத்துடன்‌ பார்க்கின்ற அரசாக தற்போதைய தி.மு.க. அரசு விளங்குவதாக அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களில்‌ பணியாற்றும்‌ பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்‌ கூறுகிறார்கள்‌. அண்ணா தொழிற்சங்கத்தைச்‌ சார்ந்த நிர்வாகிகளுக்கும்‌, உறுப்பினர்களுக்கும்‌ வழித்தட பணியாணை மறுக்கப்படுவதாகவும்‌, அவர்களைவிட பணியில்‌ இளையவராக உள்ளவர்களுக்கு வழித்தட பணியாணை வழங்கப்படுவதாகவும்‌,

எவ்வித காரணமுமின்றி அவர்கள்‌ பணிமனை மாற்றம்‌ செய்யப்படுவதாகவும்‌, சில நேர்வுகளில்‌ பணிவழங்க மறுப்பதாகவும்‌, பணிக்கு வரும்‌ மூத்தத்‌ தொழிலாளர்களுக்கு வருகைப்‌ பதிவு கூட வழங்காமல்‌ அவர்கள்‌ திருப்பி அனுப்பப்படுவதாகவும்‌, அண்ணா தொழிற்சங்கம்‌ பயன்படுத்தி வந்த சங்க அலுவலகங்களை வலுக்கட்டாயமாக தி.மு.க.வினர்‌ எடுத்துக்‌ கொள்வதாகவும்‌ அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள்‌ தெரிவிக்கின்றனர்‌.


தமிழ்நாட்டின்‌ போக்குவாத்து வளர்ச்சிக்கு முதுகெலும்பாக, அடித்தளமாக, ஆணிவேராக விளங்கும்‌ தொழிலாளர்களை அவர்கள்‌ சார்ந்திருக்கும்‌ தொழிற்சங்கத்தின்‌ அடிப்படையில்‌ பிரித்து பார்த்து, அவர்கள்‌ அண்ணா தொழிற்சங்கத்தைச்‌ சார்ந்தவர்களாக இருந்தால்‌ அவர்களை பழிவாங்குவது என்பது தொழில்‌ அமைதிக்கு குந்தகம்‌ விளைவிப்பதாகவும்‌,தொழில்‌ உறவை சீர்குலைப்பதாகவும்‌ அமையும்‌.

எனவே, அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களில்‌ பணிபுரியும்‌ அனைத்துத்‌ தொழிலாளர்களையும்‌ ஒரே கண்ணோட்டத்துடன்‌ பார்த்து, கட்சி வித்தியாசமின்றி பணிகளை ஒதுக்கவும்‌, பணியிட மாற்றம்‌, இலகுப்‌ பணி, பதவி உயர்வு எனஅனைத்தும்‌ விதிகளுக்குட்பட்டு நடைபெறவும்‌  தமிழ்நாடு முதலமைச்சர்‌  உத்தரவிட வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Top