logo
குழந்தை  திருமணம் செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்:மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

குழந்தை திருமணம் செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்:மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

01/Jul/2021 11:01:59

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்குழந்தை திருமணம் என்பது 18- வயது பூர்த்தியடையாத பெண்ணிற்கும்,   21-வயது பூர்த்தியடையாத ஆணிற்கும் நடத்தப்படும் திருமணம் ஆகும்.

இத்திருமணம் சட்டப்படி குற்றமாகும். குழந்தை திருமணம் செய்வதால் பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், கருச்சிதைவு ஏற்பட்டு தாய், சேய் மரணம் ஏற்படுதல், பிறக்கக்கூடிய குழந்தைகள் எடைகுறைவாகவும், உடல், மன குறைபாடு உடைய குழந்தைகளாக பிறத்தல் போன்ற பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.

 எனவே இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுத்து நிறுத்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18- வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

 மேலும் குழந்தை திருமணம் செய்வோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-இன்படி குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

மேலும் இச்சட்டத்தின்கீழ் குழந்தை திருமணத்தை நடத்தியவர், மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார், திருமணத்தை நடத்திவைக்கும் புரோகிதர், மண்டப உரிமையாளர் மற்றும் திருமணத் தில் கலந்துகொண்ட உறவினர்கள் ஆகிய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தை திருமணம் குறித்த தகவல் அறிந்தால் சைல்டுலைன் இலவச தொலைபேசி எண் 1098, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் 04322-221266 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் 8056431053 என்ற அலைபேசி எண்ணிலோ  தகவல் தெரிவிக்கலாம்.

Top