logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மானியத்துடன்  காப்பீடு செய்யலாம்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்யலாம்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

28/Jun/2021 06:58:30

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: தேசிய கால்நடை இயக்கம் மூலம்   புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21 -ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 6,300 கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் காப்பீடு மேற்கொள்ள 2 சதவிகித பிரிமியத் தொகையில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்ப்போருக்கு 70 சதவீதம் மானியமும், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் மானியமும்  வழங்கப்படும்.

இரண்டரை ஆண்டு முதல் 8 ஆண்டு வயதுள்ள கறவை மாடுகள், எருமைகள் மற்றும் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வயதுள்ள வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படும். அதிகபட்சமாக ரூ.35,000 -க்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீட்டு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும்.

ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம்.

Top