logo
ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

24/Jun/2021 09:44:59

ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி கொரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் 10 மையங்களிலும் புறநகர்ப் பகுதியில் 66 மையங்களில் என மொத்தம் ஈரோடு மாவட்டம் முழுவதும் 76  மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையங்களிலும் 200 டோக்கன், 100 டோக்கன் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போடப்படும் மையங்கள் முன்பு அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று போட்டு வருகின்றனர். சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்படுவதால்  போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசி போடப்படும் மையங்களில் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்து இருப்பதால் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 இந்நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு சுழற்சி அடிப்படையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப் பகுதிகளிலும், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதைப் பற்றி அறியாத சில மக்கள் வழக்கம் போல் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள  ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போட  வியாழக்கிழமை காலையில் திரண்டனர்.

இதேபோல் ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடப்படும் மையத்தில் முன்பு அதிகாலையிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்தனர். ஆனால் மையத்தின் முன்பு இன்று தடுப்பூசிகள் போடப்படவில்லை என அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மாநகராட்சி பணியாளர்களிடம் இது குறித்து கேட்ட போது இன்று முதல் தடுப்பூசிகள் உங்கள் வார்டு பகுதியிலேயே போடப்படும். அதனால் இங்கு தடுப்பூசி போடப்பட மாட்டாது என்று கூறினர்.

இதை முதலிலேயே எங்களிடம் தெரிவிக்க வேண்டியது தானே என்று  கூறி பொதுமக்கள் 80-க்கும் மேற்பட்டோர் திடீரென சத்தி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த  வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  பொதுமக்களிடம் சமாதானம் செய்ததையடுத்து  பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Top