logo

ஈரோடு வ உ சி பூங்காவில் தற்காலிக காய்கறி சந்தைக்கான தரைத் தளம் அமைக்கும் பணி- ஆணையர் இளங்கோவன் தகவல்

02/Oct/2020 12:07:50

ஈரோடு: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு ஆர்.கே.வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.பின்னர் வ.உ.சி பூங்காவில் ரூ.1 கோடி மதிப்பில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டது. இதில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு இரவு முழுவதும் மொத்த வியாபாரமும். காலை 12 மணி வரை சில்லரை வியாபாரமும் நடைபெற்று வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பொதுமக்கள் வந்து செல்வதால் காய்கறி மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும்.

ஆனால் மழைக் காலங்களில் காய்கறி மார்க்கெட் பகுதி சேறும் சகதியுமாக மாறி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் பொது மக்கள் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். சந்தைப் பகுதிகள் சேரும் சகதியும் உருவாவதை தடுக்க தரைப்பகுதியில் கான்கிரீட் போட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வ உ சி பூங்கா தாற்காலிக சந்தையில் தார்ச்சாலை போட மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை பிற்பகல் தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை வரை முதல் கட்டமாக ஜல்லி போடும்  பணி நடைபெறுகிறது.

இது குறித்து  ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியது: ஈரோடு வ.உ. சி. பூங்கா பகுதியில் தற்காலிக சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு  மழைக் காலங்களில் மார்க்கெட் பகுதிக்குள் தண்ணீர் புகுந்து சேரும் சகதியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் வியாபாரிகள் தார்ச்சாலை  போட்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று ரூ. 25 லட்சம் மதிப்பில் மார்க்கெட் பகுதியில் தார்ச்சாலை போட முடிவு செய்துள்ளது. இதற்காக இன்று மதியம் முதல் நாளை மாலை வரை முதற்கட்டமாக மார்க்கெட் பகுதியில் ஜல்லி போடும் பணி நடைபெறுகிறது. இதனால் இன்று இரவும் ,நாளை  ஒரு நாள்  மார்க்கெட்டுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அடுத்த வாரம் தார்ச்சாலை போடப்படும் என்றார். 


Top