logo
புதுக்கோட்டை மாவட்டம்..  அதிகார மையங்களில் தலைமை வகிக்கும்   பெண் ஆளுமைகள்..

புதுக்கோட்டை மாவட்டம்.. அதிகார மையங்களில் தலைமை வகிக்கும் பெண் ஆளுமைகள்..

16/Jun/2021 01:50:31

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சியர் முதல்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  என  அனைத்து  அதிகார மையங்களிலும் பெண் அதிகாரிகள் தலைமை வகிக்கும் நல்ல சூழல் உருவாகியுள்ளது.


புதிதாக பொறுப்பேற்ற திமுக  தலைமையிலான தமிழக அரசு ஒரு மாதத்துக்குப்பிறகு தமிழகம் முழுவதும் இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அதில் பல்வேறு மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்  பல்வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டனர்.


இந்த இடமாற்றம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் அனைத்து நிலைகளிலும்  பெண் அதிகாரிகளே தலைமைப் பொறுப்பு வகிக்கும் நல்ல சூழலை உருவாக்கியுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவராக கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன், வருவாய் கோட்ட அலுவலராக  அபிநயாநகர துணை கண்காணிப்பாளராக லில்லிகிரேஸ் ஆகிய பெண் அதிகாரிகள் புதுக்கோட்டைக்கு  பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் ஏற்கெனவே, கூடுதல் காவல் கண்காணிப்பாளராக  கீதா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பூவதி, மருத்துவப்பணிகள் துணை இயக்குநராக பா.கலைவாணி, முதன்மை கல்வி அலுவலராக ஜெயலெட்சுமி ஆகிய பெண் அதிகாரிகள் பணியாற்றி வரும் சூழலில் தற்போது  மாவட்டத்தின் அனைத்து தலைமைப் பொறுப்பிலும் பெண்களே  வந்திருப்பது  மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெண்ணினத்துக்கு பெருமை சேர்த்த நாட்டின் முதல் பெண் மருத்துவர், சமூகப் போராளி டாக்டர்  முத்துலெட்சுமி பிறந்த புதுக்கோட்டை மண்ணில் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில்  மாவட்டத்தில் தலைமைப் பொறுப்பேற்றுள்ள பெண்மணிகளின்  பணிகள்   சாமானிய மக்களுக்கானதாக அமைய  வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Top