logo
மாணவர் சமூகம் மலர்ச்சி அடைய வழிவகை செய்யுமா கல்வித்துறை.. தமிழக அரசுக்கு அவசரமாக 5 கோரிக்கைகள்

மாணவர் சமூகம் மலர்ச்சி அடைய வழிவகை செய்யுமா கல்வித்துறை.. தமிழக அரசுக்கு அவசரமாக 5 கோரிக்கைகள்

28/Sep/2020 06:03:59

இது குறித்து கல்வியாளர், எழுத்தாளர்  சிகரம் சதீஷ்குமார் தமிழக அரசுக்கு விடுத்துள்ள அவரசக் கோரிக்கைகள் விவரம்:

பள்ளிக்கல்வி வயது: தமிழ்நாட்டில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கான வயது என்பது 5 +  வயதுக்கு மேல்  என்பதை சட்டவடிவமாக்க வேண்டும். ஒரு குழந்தை தனது குழந்தைப் பருவத்தை உணரவும், அது குழந்தையாக இருக்கவும் அனுமதிக்க வேண்டும். pre KG என்கிற பெயரில் 2 வயது முடிந்த உடனேயே பள்ளிகளில் சேர்ப்பதைத் தடை செய்ய வேண்டும். நம் தமிழக அரசு பின்லாந்து கல்விமுறையைப் பார்வையிட ஓர் குழுவை அனுப்பியது. உலகின் சிறந்த கல்விமுறை எனப் போற்றப்படக்கூடிய பின்லாந்தில் பள்ளிக்கல்வி 7 + வயதில்தான் தொடங்குகின்றது

தனியார் பள்ளிகள் Pre.KG, L.K.G , U.K.G வகுப்புகளை நடத்தியபொழுது குழந்தைகளது சுதந்திரம் நசுக்கப்படுகிறது. சுதந்திரச்சிறகுகள் முறிக்கப்படுகின்றது எனப்பேசினோம். ஆனால் இன்று அதே தவறை அரசும் செய்கின்றது என்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.குழந்தைப் பருவத்தை உணராமல் குழந்தைகள் வளர்வதால்தான் மனிதநேயம் குறைந்து முதியோர் இல்லங்களும், ஆதவற்றோர் இல்லங்களும் பெருகிவிட்டன.

குழந்தைகளை குழந்தைகளாக வளரவிடாமல் 3 வயதில் கல்வி என்பது அவர்கள் குழந்தைப் பருவத்தின் மீது திணிக்கப்படும் மிகப்பெரிய வன்முறை. வழக்கம்போல் செயல்படும் அங்கன்வாடிகளை தரம் உயர்த்தி, அவற்றின் கட்டமைப்பை வலுவூட்டும் முன்னெடுப்பை அரசு மேற்கொள்ள வேண்டும்.மக்களுக்காகத்தான் கொள்கை வகுப்பட வேண்டுமே தவிர, கொள்கைகளுக்காக மக்களை நசுக்க முற்படக்கூடாது. எனவே குழந்தைப்பருவம் என்பது அவர்களது உரிமை. அது காக்கப்பட வேண்டும். 

பள்ளிகளின் கட்டமைப்பு: தமிழ்நாட்டில் எந்த அரசுப்பள்ளிக்குச் சென்றாலும் ஒரே மாதிரியான கட்டமைப்பு வசதிகள் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இருக்கும் என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களை ஈர்ப்பதில் கட்டமைப்பு வசதிகள் என்பவை மிகமுக்கியமானவை. அவை அரசுப்பள்ளிகள் நிலைத்த தன்மையோடு இருப்பதில்லை என்கிற நிலை மாற வேண்டும்கட்டிட வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி, தொழில்நுட்ப வசதி , பாதுகாப்பு வசதி என அனைத்தும் ஒரே மாதிரியான தன்னிறைவைப் பெற்றவையாக இருக்க வேண்டும்.இது அரசால் முடியுமா? என சிந்திக்க கூடாது. அரசால் முடியாத ஒன்று என எதுவுமில்லை. கல்விக்கூடங்கள் என்பவை விளைச்சல் தரும் நாற்றங்கால்கள்.அவை காக்கப்பட வேண்டும். அவை காக்கப்பட்டால் விதைகள் எல்லாம் விருட்சமாகும். மாணவர்களை இங்கு சேருங்கள் என விளம்பரமே தேவையில்லை. தரம் உயர்த்துதலைவிட விளம்பரம் ஏதுமில்லை

தாய்மொழியில் தொடக்கக்கல்வி:தமிழ்நாட்டில் உள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் தொடக்கக்கல்வி தாய்மொழியில் மட்டுமே இருக்கும் என்கிற நிலையை சட்டவடிவாக கொண்டுவர வேண்டும். உலகின் மிக உயர்ந்த வளர்ச்சி பெற்ற நாடுகளெனக் கருதப்படும் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிளெல்லாம் தாய்மொழிவழியிலான கல்விமுறையே நடைமுறையில் இருக்கின்றது. நாம் தொடக்க நிலையில் இதனைச் சட்டமாக்கி, அமல் செய்தால் வருங்காலத் தலைமுறை வளமான தலைமுறையாக வளர்வதோடு, தமிழ்நாட்டில் தாய்மொழி பயிலாத ஒரு குழந்தைகூட இல்லை என்கிற நிலையில் தாய்மொழியும் காக்கப்படும். அனைத்துவகைப் பள்ளிகளிலும் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வி மட்டுமே செயல்படுத்தப்படும் என்னும் உத்தரவை தயக்கமின்றி, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். தாயைக் காப்பாற்றுவதற்கு குழந்தை யோசித்தால் எப்படி இருக்குமோ? அப்படிப்பட்ட யோசனையாகத்தான் இருக்கும், இதனை நடைமுறைப்படுத்தலாமா? வேண்டாமா? என யோசிப்பது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை களைப்போல, ஆரோக்கியமான சமுதாயமாக தொடக்கக் கல்வியில் தாய்மொழியில் படித்து வளரும் மாணவர்கள் வளர்ந்து சமுதாயத்திற்குப் பலன் தருவார்கள். எனவே அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடமுறைப்படுத்த வேண்டும்

அரசாணைகள் அத்தனையும் தமிழில் வெளியிட வேண்டும் தமிழ்நாட்டில் வெளியாகும் அனைத்து அரசாணைகளும் கட்டாயம் தாய்மொழியான தமிழிலேயே வெளியாகும் என்கிற அரசாணையை ஏற்படுத்தி, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இது தாய்மொழியாக தமிழைக் கொண்டிருக்கின்ற நம் மாநிலம் அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டிய விசயமாகும். நம் தாய்மொழியை பிரநிதித்துவப்படுத்துகின்ற செயலை நாம்தான் செய்ய வேண்டும். தாய்மொழியில் ஒரு அரசாணை வெளியாகவில்லை என்பது அந்த மொழிக்கும், அரசுக்கும் இழுக்காகவே கருதப்பட வேண்டும். பிற மொழிகளில் வெளியிடுவதில் பிழையில்லை. ஆனால் தாய்மொழியிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதே இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். தாய்மொழியைத் தவிர்த்துவிட்டு, எம்மொழியிலும் வெளியிடக்கூடாது என்பதே சட்டமாக வேண்டும்

தமிழ்நாட்டில் தமிழிலேயே தேர்வு, தமிழ் தெரிந்தவர்களுக்கே பணி: தமிழ்நாட்டில் நடக்கின்ற  மற்றும் தமிழகத்தில் பணிவாய்ப்பை வழங்குவதற்காக நடத்தப்படுகின்ற அனைத்துவகை தேர்வுகளுக்கான மொழியில், தமிழில் இருக்க வேண்டும். எவ்வகையான தேர்வென்றாலும் நிச்சயம் தாய்மொழியான தமிழும் ஒரு மொழியாக இருக்க வேண்டும் என்கின்ற சட்டவடிவைக் கொண்டுவர வேண்டும். அதேபோல தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைவருக்கும் நிச்சயமாகத் தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என்கிற சட்டவரைவும்அவசியமாகும்.தமிழகம்கடந்து அல்ல,தமிழ்நாட்டில் தமிழ்மொழியைக் காக்க, இந்த நடைமுறையை அவசியம் கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Top