logo
அதிமுகவில் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் தொண்டர்கள் சோர்வு

அதிமுகவில் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் தொண்டர்கள் சோர்வு

10/Mar/2021 11:20:39

சென்னை:  அதிமுகவில் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 5ஆம் தேதி வெளியானது. நல்ல நாள் என்பதால் அன்றைய தினம்  வெளியிடப்பட்டது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 6 பேரின் தொகுதிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் மறுநாளே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

முதற்கட்டமாக ஓ.பன்னீர்செல்வம் - போடிநாயக்கனூர், எடப்பாடி பழனிசாமி- எடப்பாடி, ஜெயக்குமார் - ராயபுரம், சி.வி.சண்முகம் - விழுப்புரம், எஸ்.பி.சண்முகநாதன் - ஸ்ரீவைகுண்டம், எஸ்.தேன்மொழி - நிலக்கோட்டை (தனி) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் ஒரு வேட்பாளர் என்ற வகையிலும், பல்வேறு சமூகங்களை சார்ந்த வேட்பாளர்கள் என்ற அளவிலும் அந்த வேட்பாளர் பட்டியல் பார்க்கப்படுகிறது.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி எண்ணிக்கை உடன்பாடே உறுதியாகாத நிலையில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அவ்வாறு உருவாகவில்லை. அதிமுக விட்டுக்கொடுக்க தயாராக இல்லாத தொகுதிகளில் அவர்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதேபோல் சில அமைச்சர்களின் தொகுதிகளையும், அதிமுகவுக்கு எந்த சூழலிலும் வெற்றியைப் பெற்றுத்தரும் தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தங்களது பெயர்களை இணைத்து விரைவில் அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரைத் தனித்தனியாக சந்தித்தும் அதிமுக மேல்மட்ட நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும், கட்சியின் சீனியர்கள் நீங்களே இப்படி நடந்துகொள்ளலாமா வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க சசிகலா ஆதரவாளர்கள் சிலர் தினகரன் பின்னால் சென்றனர். பதவியிழந்த 18 எம்எல்ஏக்களில் சிலர் அதிமுகவுக்கு வந்துவிட்டனர். சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ எதிர்க்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன்அண்மையில் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இவ்வாறு மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியவர்கள் சிலருக்கு சீட் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் அதற்கு ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியதன் பின்னால் எடப்பாடி பழனிசாமி சார்பாக சென்ற ஒரு நபர் நீங்கள் தேர்தல் வரை ஒதுங்கியிருங்கள். அதன் பின்னர் உங்களுக்கான மரியாதையும், கௌரவமும் கொடுக்கப்படும் என கூறியதாக சொல்கின்றனர். இதைத் தொடர்ந்து   சசிகலா சில வேண்டுகோள்களையும் விடுத்துள்ளதாக கூறப்பட்டது.

அதன்படி தனது ஆதரவாளர்கள் சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான் சசிகலாவின் கோரிக்கையாக கூறுகிறார்கள். அதை நிறைவேற்றவே எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்கள் பட்டியலில் அவர்களில் சிலரது பெயரை சேர்க்க வலியுறுத்தி யுள்ளார் என்கிறார்கள்.

ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதையும் மீறி சசிகலாவின் வேண்டுகோளை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு முயற்சி செய்யலாம் என கூறப்படுகிறது.


Top