logo
தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல்...?  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல்...? தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம்

12/Feb/2021 12:54:42

சென்னை: தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினர், தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நடைபெற்றது.

அதன் பிறகு அவர் தெரிவித்த தகவல்: மே 24-ஆம் தேதியுடன் தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடிவடைகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டி உள்ளது..வழக்கமாக தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாகவே இருக்கும்.

இந்த முறை வாக்கு சதவீதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கொரோனா காலம் என்பதால் வாக்களிக்கும் நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். கொரோனா சூழலில் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. வாக்காளர்கள் எவ்வித தயக்கமும் இன்றி வாக்குச்சாவடிக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். கொரோனா மிக அதிகமாக இருந்த சூழலில் பீகாரில் தேர்தலை நடத்திக் காட்டினோம். தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வலியுறுத்தினார்கள்.வாக்குப்பதிவு முடிந்த ஒன்று அல்லது 2 நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்தவும் அரசியல் கட்சியினர் கேட்டுக் கொண்டனர்.கேரளா, மேற்குவங்கம் மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கையை தமிழகத்தில் உடனடியாக நடத்துவது குறித்து முடிவெடுக்க இயலாது

வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்குவதை தடுக்க சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.சில அரசியல் கட்சிகள் மறுபடியும் வாக்குப் பெட்டி முறைக்கு மாற வலியுறுத்தின. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.தமிழகத்தில் வாக்குப் பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால் வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை - வாக்குறுதி அளிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார் சுனில் அரோரா.

Top