logo
தேசிய திறனறித்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவியை பாராட்டி அஞ்சல்தலை வெளியீடு

தேசிய திறனறித்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவியை பாராட்டி அஞ்சல்தலை வெளியீடு

24/Sep/2020 02:36:38

சிவகங்கை: கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்தத்தேர்வில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 2019-2020-ஆம் கல்வி ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், தேர்வு செய்யப்பட்ட 6695 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 10 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். அதில், 131 பேர் வெற்றி பெற்றனர். இதில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள சேவினிப்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சத்தியப்பிரியா,  ராகப்பிரவீணா, முருகா (எ)நடராஜா, சந்தோஷ்குமார், முருகானந்த் ஆகிய 5 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் மாணவி சத்தியப்பிரியா 138 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதலிடத்தையும், மாநில அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார்.

இதையடுத்து,  (NMMS)  தேர்வில் கடந்த 7 ஆண்டுகளாக சேவினிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  பெற்று வரும் தொடர் வெற்றியையும், மாநில அளவில், மூன்றாம் இடமும் மாவட்ட அளவில் முதலிடம் வென்ற இப்பள்ளி மாணவி மு. சத்தியபிரியாவை பாராட்டும் வகையிலும்  21 /9 /2020 -அன்று  நடந்த அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர்  ஜெயகாந்தன் தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, கேடயம் வழங்கி,சாதனை படைத்த மாணவியின் உருவம் பதித்த அஞ்சல் தலையை வெளியிட்டு வாழ்த்தினார்.

இதில், முதன்மைகல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்டகல்வி அலுவலர்,வட்டாரக்கல்வி அலுவலர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர், பள்ளித்தலைமையாசிரியர் க. சாந்தி, ஆசிரியர்கள் பங்கேற்று  மாணவர்களுக்கு பாராட்டுத்  தெரிவித்தனர்.


Top