logo
பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் இருந்து ஈரோட்டுக்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு

பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் இருந்து ஈரோட்டுக்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு

10/Jan/2021 07:02:04

ஈரோடு, ஜன: கேரளா மாநிலத்தில் தற்போது பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவிவருகிறது. இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உடன் கால்நடைத்துறை அதிகாரிகள் கலந்து ஆலோசனை கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

இந்த கூட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள், கோழிப் பண்ணை களை சுகாதாரமாக  கையாளுவது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை சுத்தம் செய்த பிறகே அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர் சி கதிரவன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு என்பது இதுவரை தென்படவில்லை. ஆனாலும் கோழிப்பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு ள்ளது.

 மேலும் வெளிமாவட்ட மாநிலங்களிலிருந்து முட்டை,  கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தி கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்து பிறகே உள்ளே அனுமதிக்கப் படுகிறது.

மேலும் மாவட்டத்தில் கடம்பூர், பர்கூர், பவானி ,கொடுமுடி உள்ளிட்ட பகுதியில் உள்ள சோதனை சாவடியில் மருந்து தெளித்த பிறகு வாகனங்கள் உள்ளே வர அனுமதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Top