logo
பிரதமர் மோடி தெரிவித்த 3 பொய்கள் குறித்து கருத்து கூறுவாரா? - ப.சிதம்பரம் கேள்வி

பிரதமர் மோடி தெரிவித்த 3 பொய்கள் குறித்து கருத்து கூறுவாரா? - ப.சிதம்பரம் கேள்வி

20/Dec/2020 11:25:56

புதுதில்லி:  எதிர்க்கட்சிகள் பொய் பிரசாகம் செய்து வருவதாக கூறும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த 3 பொய்கள் குறித்து கருத்து கூறுவாரா? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லையில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டம் 23-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நீடித்தது. அவா்களுடன் மத்திய அரசு இதுவரை நடத்திய பலகட்ட பேச்சுவாா்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே, விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு நிறுத்தி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், மத்திய பிரதேச மாநில விவசாயிகளுடன் பிரதமா் மோடி காணொலி வழியாக வெள்ளிக்கிழமை உரையாற்றினாா். அப்போது, வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளை எதிா்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன என்று குற்றஞ்சாட்டினாா். 

மேலும் , சீா்திருத்தங்களை மோடி கொண்டு வந்ததுதான் எதிா்க்கட்சிகளுக்குப் பிரச்னையாக உள்ளது. அதற்கான நற்பெயரை எனக்கு கொடுக்க வேண்டாம். எதிா்க்கட்சியினா் தங்கள் தோ்தல் அறிக்கைக்கு கொடுக்க வேண்டும். விவசாயிகள் முன்னேற வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறேன். ஆனால், அவா்களை தவறாக வழிநடத்துவதை எதிா்க்கட்சியினா் நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி வருவதாக பிரதமர் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கருத்து தெரிவிக்க வேண்டிய 3 பொய்கள் இங்கே உள்ளது. பிரதமர் கருத்து கூறுவாரா? என டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதில், விவசாயிகளின் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழுவினர், குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,870 என்றாலும் ஒரு குவிண்டால் நெல் ரூ.900 க்கு விற்கப்படுகிறது என்கின்றனரே அது பொய்யா?

உள்துறை உத்தரவால் தப்லீக் ஜமாத்தினர் வேண்டுமென்றே பிடித்து வரப்பட்டதாக தில்லி நீதிமன்றம் தெரிவித்தது விடுவித்ததே அது பொய்யா?  உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில்  பட்டியலினத்தைச் சோ்ந்த 19-வயதுப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பலியான சம்பவத்தில் நான்கு பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதே அது பொய்யா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.


Top