logo
ஈரோடு மாவட்டத்தில்  இதுவரை 7 அம்மா மினி  கிளினிக்குகள் திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 7 அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு

20/Dec/2020 08:33:18

ஈரோடு-டிச:  ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக 24 இடங்களில் மினி கிளினிக்குகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 7  மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் கொரோனாவுக்கான ஊரடங்கு தளர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழகத்தில் டிசம்பர், 15-ஆம்  தேதிக்குள் 2 ஆயிரம் இடங்களில்  அம்மா மினி கிளினிக் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். மாவட்ட வாரியாக தேவையான இடங்களில், இந்த கிளினிக் இயங்கி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இங்கு ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு உதவியாளர் செயல்படுவர். காலை மற்றும் மாலையில் குறித்த நேரம், இங்கு சிகிச்சை வழங்கப்படும், என்றார்.

இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மினி கிளினிக் திறக்கும் இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் மினி கிளினிக் அமைப்பதற்கான இடங்கள் குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்புடன், மக்களுக்கு கூடுதல் மருத்துவ சேவை வழங்கும் வகையில். அனைத்து பகுதியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில், மினி கிளினிக் ஒதுக்கப்படும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி முதல் கட்டமாக அம்மா மினி கிளினிக்குகள் பல்வேறு இடங்களில்  திறந்து வைக்கப்பட்டது.  இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.அதைப்போல் ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக 24 இடங்களில் மினி கிளினிக்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே, நகர்புற சுகாதார மையங்கள், கிராமப்புறங்களில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார மையங்கள் இயங்குகிறது. இவற்றுக்கு மாற்றாகவும், குடிசைப்பகுதி, நீண்ட துாரங்களில் உள்ள கிராமப்பகுதி, மலைப்பகுதி, குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ள பகுதி என மருத்துவ சேவை தேவைப்படும் பகுதியை கண்டறிந்து கிளினிக்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியில் உள்ள விஜயபுரி மற்றும் பெரிய வீர சங்கிலி ஆகிய இரண்டு இடங்களில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டன. இதைப்போல் கொடுமுடி அருகே இச்சிபாளையத்தில் அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதைப்போல் பவானி, காளிங்கராயன் அருகே அம்மா மின் கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக மாவட்டத்தில் இதுவரை 7 அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிப்படியாக வரும் நாட்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 24 இடங்களில் மினி கிளினிக்குகள் செயல்பட அனுமதி கிடைத்துள்ளது. இதில் தற்போது வரை 7 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

இங்கு, காய்ச்சல், சளி, இருமல், ரத்த அழுத்தம் , சர்க்கரை நோய் உள்ளிட்ட அனைத்து வகையான சிகிச்சைகளும் இலவசமாக பார்க்கப்படுகிறது. இந்த கிளினிக்குகள் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் செயல்படும். கிராமப்புறப் பகுதியில் 7 மணி வரை செயல்படும். இனிவரும் நாட்களில் படிப்படியாக மற்ற மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என்றனர்.

Top