logo
தில்லியில் விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

தில்லியில் விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

05/Dec/2020 02:43:43

புதுதில்லி:போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் 5-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தைக் கைவிட, விவசாய சங்கங்களுடன் ஏற்கனவே மத்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.

விவசாயிகளுடன் மத்திய அரசு 4-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்திய போது, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எந்த அகங்காரமும் இல்லை, விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு திறந்த மனதுடன் ஆலோசித்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 5-ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் மத்திய அரசு தயாராகி வருகிறது.இதுகுறித்து, இன்று காலை தில்லியில் பிரதமர் இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதுபோன்ற உறுதிமொழியை அளிக்க முடியுமா? புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கலாமா? என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Top