logo
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் சாலை மறியல்- இடதுசாரி கட்சியினர் 200 பேர் கைது

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் சாலை மறியல்- இடதுசாரி கட்சியினர் 200 பேர் கைது

04/Dec/2020 06:40:39

ஈரோடு: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குறைந்த ஆதார விலையை ஒழித்துக்கட்டும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம். உணவுப் பொருள்களையும் பற்றாக்குறையைஏற்படுத்தி விலை உயர்வுக்கு வழிவகுக்கும் விவசாய விளை பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம். விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்த சட்டம் ஆகிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் தில்லியில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் சென்று இந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்று 9-ஆவது நாளாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் 3   வேளாண்  சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  

அதன்படி, வெள்ளிக்கிழமை ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள  தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்  திரண்டனர். . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் பத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் வேளாண் மசோதா சட்டங்கள் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி  முழக்கமிட்டனர். 

 பின்னர் அனைவரும்  திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  டவுன் டிஎஸ்பி ராஜூ தலைமையில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Top