logo
லாட்டரி சீட்டை ஒழித்தார் ஜெயலலிதா; ஆன்லைன் ரம்மியை தடை செய்தார் எடப்பாடி பழனிசாமி...

லாட்டரி சீட்டை ஒழித்தார் ஜெயலலிதா; ஆன்லைன் ரம்மியை தடை செய்தார் எடப்பாடி பழனிசாமி...

03/Dec/2020 09:36:49

2003 -இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா லாட்டரி என்ற அரக்கனை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். பல லட்சம் தமிழர்கள் அன்றாட வருவாயை லாட்டரி வாங்கி லட்சாதிபதி ஆகிவிடலாம் என்ற கனவால் குடும்பத்து மகிழ்ச்சிகளை சீரழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தே லாட்டரியை தடை செய்தார்.

லாட்டரி சீட்டு அடிமைத்தனம் கையில் இருந்த சிறு சேமிப்பை முற்றிலும் கரைத்துவிடும் பின்னணியில் பலர் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. திருமணச் செலவுக்காகவும், படிப்பு செலவுக்காகம் இருந்த பணத்தில் இப்படி ஒரு ரூபாய் லாட்டரிகளால் பெரும் வீரியம் ஏற்பட காரணம் என்ன?

லாட்டரி அடித்தால் லட்சாதிபதி ஆகி விடலாம் என்ற போதைத்தன அடிமைதனத்தால் தினமும் பல நூறு ரூபாய்க்கு வாங்க ஆரம்பித்து விடுவார்கள், பின்னர் ஒரு கட்டத்தில் தன் நிலை மறந்து கையில் இருப்பை ஓர் முதலீடு போல் லாட்டரி வாங்கி கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று கனவுலகத்தில் மிதப்பார்கள்.

இந்த அடிமைத்தனத்தை களை அறுக்கவே அன்று ஜெயலலிதா லாட்டரியை முற்றிலும் தடை செய்தார். நாட்டிற்கே நல் உதாரணமாக விளங்கினார்.உலகெங்கும் எங்கும் எங்கும் எதிலும் சூதாட்டம் நடைபெறுகிறது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் குதிரைப் பந்தயங்கள் முதல் பல்வேறு சூதாட்ட நிகழ்வுகள் தங்கு தடையின்றி நடைபெற சூதாட்ட சட்டத்தை நாடெங்கும் வியாபித்தனர்.

ஆனால் நாம் சுதந்திரம் பெற்ற வடிவமைத்த அரசியலமைப்பு சட்ட விதிகள் படி சூதாட்டம் மாநில உரிமைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரே சட்ட திட்டத்தை மத்திய அரசால் கொண்டு வர முடியாது.தமிழகத்தின் அருகாமை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் எல்லாம் லாட்டரி விற்பனை தொடர்ந்த போதும் தமிழகத்தில் அதை முற்றிலும் நுழைய விடாமல் செய்த சாதனை ஜெயலிதாவின் இரும்புக்கர ஆட்சித் திறனுக்கு சான்றாகும்.

இன்டர்நெட் சேவைகள் உலகளாவிய பலவற்றை நம் கையடிக்க செல்போனில் கொண்டு வந்துவிட்டதால் பல வகைகளில் உதவியாக இருக்கிறது.செய்திகள்- கருத்துக்கள், தகவல்கள், பல கோடி லட்சம் வார்த்தைகளுக்கு அர்த்தங்கள், மொழிபெயர்ப்புகள், வீடியோ திரைப்படங்கள், இசை, ஷாப்பிங் போன்ற பல்வேறு வசதிகள் ஆன்லைனில் வந்துவிட்டது.

கையடக்க செல்போனில் பிரத்தியேகமாக, தனிமையில் இதையெல்லாம் பார்த்து, தேவையானதை பெற்று மகிழ முடிகிறது. இந்த புதுமையான ரசனை முறைகள் இளைஞர்களுக்கு பல்வேறு ஆபத்துக்களும் இருக்கத்தான் செய்கிறது.

கம்ப்யூட்டர் விளையாட்டுகள் 1980-களிலேயே பிரபலம் தான், வீடியோ பார்லர்கள் அப்போதே சென்னையில் இருந்தது. துப்பாக்கிச் சண்டை முதல் கார் ரேஸ் பந்தயங்கள் வரை எல்லாமே இருந்தது.

அதில் வெற்றி பெறுபவருக்கு சன்மானம் என்று ஏதும் கிடையாது. ஆனால் விளையாட வந்தவர்களுக்குள் பந்தயத் தொகை இருந்தால் அதை எப்படி தடுக்க முடியும்?.அன்றே துவங்கிய கம்ப்யூட்டர் விளையாட்டுகள், இன்றோ படுநவீன தொழில்நுட்பங்களின் உதவியால் அன்றாட வாழ்க்கை சமாச்சாரமாகவே உயர்ந்துவிட்டது. பல்வேறு விளையாட்டுகளில் உயிருக்கே ஆபத்தான நடப்புகளை செய்ய வைக்கும் சவால்கள் வர ஆரம்பித்தபோது உயிர் சேதமும் ஏற்பட்டு வருகிறது.

ஆம், அன்றைய நாளில் லாட்டரி அடிமைத்தனம் போல் தற்போது ஆன்லைன் விளையாட்டுகள்.கிரிக்கெட் சூதாட்டத்தை தடை செய்த மத்திய அரசால் சமீபமாக விளையாட்டு வீரர்களே டிவியில் தோன்றி விளையாட வா, கை நிறைய சம்பாதிக்கலாம்! என்று கூறும் விளம்பரங்கள் வெளிவருவதை தடுக்க முடியாமல் மத்திய அரசு தவிக்கிறது.

வெள்ளையர்கள் நம்மிடம் விட்டுச் சென்ற சீட்டுக்கட்டு ஆட்டங்களில் ‘ரம்மி’யும் ஒன்றாகும். இல்லங்களில் குடும்பத்தார் மற்றும் நட்பு வட்டங்களால் விளையாடி மகிழுப்படும் ரம்மி இளம் தலைமுறையினரால் பணம் வைத்து சூதாட்டம் போல் மாறி வருவதை அறிவோம். கூடவே கணினி தொழில்நுட்பமும் கூட்டு சேர, நவீன பிரத்தியேக சூதாட்ட விளையாட்டாக உயர்ந்துவிட்டது.

ரம்மி சூதாட்டத்தை நடத்தும் நிறுவனங்கள் விளையாடுபவர் வங்கிக் கணக்கில் வென்ற தொகையை தந்து விடுவோம் என்று உறுதி தந்து, சரியாகவே ஜெயித்த பணத்தையும் கொடுத்து விடுகிறார்கள். 6 பேர் ஒரே சமயத்தில் விளையாடினால், அதில் ஒருவர் தானே ஜெயிக்க முடியும். மீதம் உள்ளவரின் பணம் முழுமையாக சீட்டு ஆட்டத்தை நடத்துபவருக்கு மட்டுமே சென்றடைகிறது.

தினமும் தமிழகத்தைச் சார்ந்த ஒரு லட்சம் பேராவது விளையாடி வருகிறார்கள், பணம் பரிமாற்றம் வங்கி கணக்கில் மட்டுமே இருப்பதால் நடத்துபவருக்கு மிகப்பெரிய வருவாய் உறுதியாகவே இருக்கிறது. ரம்மி ஆட்டம் சிந்தனையாளர் சமாச்சாரங்கள் என்று ஒரு சாராரும் வெறும் சூதாட்டம் என்று மற்றவர்களும் வாதாடிக் கொண்டிருந்தாலும் சென்னை உயர் நீதிமன்றம் சில மனமகிழ் விளையாட்டு சங்கங்களுக்கு அனுமதி தந்திருக்கிறது.

அச்சங்கங்கள் எப்படி நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டு விதிகளும் இருக்கிறது. அதில் முக்கியமான அம்சங்கள் சிறுவர்கள் பார்க்க கூட அனுமதி கிடையாது. சாராய மது சமாச்சாரங்கள் விற்கக்கூடாது. வரும் வருவாயில் ஒரு பகுதி வரிகளுக்கு ஒதுக்கியாக வேண்டும்.இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் ஒருசில மனமகிழ் சங்கங்கள் மட்டுமே அரசின் கண்காணிப்பில் நடந்து வருகிறது.ஆனால் தினமும் அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசின் சட்டங்கள் இல்லாததால் முழுப்பொறுப்பும் மாநிலத்தின் வசம் இருக்கிறது.

ஜெயலலிதா வழியில் நல்லாட்சி வழங்கி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இணையவழி விளையாட்டுக்களை தமிழகத்தில் தடை செய்ய சென்ற மாத இறுதியில் ஓர் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளனர். அதை உடனடியாகவும் நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். அதாவது தற்போது யாரேனும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை நடத்தினாலும் பங்கேற்றாலும் சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு.ஆன்லைன் விளையாட்டுக்கள் நவீன தொழில்நுட்பம் கொண்டு இயங்குவதால் தனிநபர் விளையாடுவதை தடை செய்வதில் சிக்கல்கள் உள்ளது.

முழுமையான தடைகள் வர இணைய சேவைகள் தருபவரிடம் ஆலோசித்து அந்த மட்டத்தில் தமிழக எல்லைக்குள் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய முடியும்.சூதாட்ட பணத்தை கட்ட வங்கி சேவை அவசியமாகுகிறது. வங்கி கணக்குகளை இணையவழி விளையாட்டு நிறுவனங்களுடன் இணைத்து பணம் செலுத்த முடியாத படி சட்டம் உருவாக்கலாம்.

இப்படியாக வங்கி சேவைகள், இணையதள சேவையாளர்கள், இணைப்பு தரும் இன்டர்நெட் வசதி தருபவர்களையும் இந்த தடை விவகாரத்தில் இணைந்து செயல்பட வைத்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்ட தடை முழுமையாக இருக்க முடியும்.


Top