logo
100 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட அன்னபூரணி சிலை கனடாவிலிருந்து மீட்பு: பிரதமர் மோடி பெருமிதம்

100 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட அன்னபூரணி சிலை கனடாவிலிருந்து மீட்பு: பிரதமர் மோடி பெருமிதம்

29/Nov/2020 04:04:14

புதுதில்லி: தேவி அன்னபூரணியின் பழங்கால சிலை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.கலைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரதமர் நரேந்திரமோடி

பிரதமர் மோடி மனதின் குரல்   நிகழ்ச்சியில் இன்று  அவர் பேசியதாவது:தேவி அன்னபூரணியின் பழங்கால சிலை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதையறிந்த ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு 1913–ஆம் ஆண்டில், இந்த சிலை வாரணாசியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டு கடத்தப்பட்டது.

நாட்டில் பாரம்பரியத்துடன் கூடிய விலை மதிப்புமிக்க மரபுச் சின்னங்களும், அடையாளங்களும் கடத்தப்படுவதை தடுப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், பல சிலைகளையும், கலைப்பொருள்களையும் மீட்டுக் கொண்டு வருவதில் நாம் வெற்றியடைந்து வருகிறோம்.

இந்தியாவின் கலாச்சாரம் முழு உலகையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. அவற்றைத் தேடி பலர் நம் நாட்டிற்கு வந்து இங்கு தங்கி இந்தியாவின் கலாச்சார தூதர்களாக தங்கள் நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.சில நாட்களுக்கு முன்பாக உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டது. உலகப் பாரம்பரிய வாரம் என்பது கலாச்சார விரும்பிகளுக்கு, அற்புதமான சந்தர்ப்பத்தை அளிக்கிறது.

பிரேசில் நாட்டை சேர்ந்த விஸ்வநாத் என்றும் அழைக்கப்படும் ஜோனாஸ் மசெட்டி நம் நாட்டின் கலாச்சாரங்கள் மற்றும் வேதங்களை அங்குள்ள மக்களுக்கு எடுத்துக் கூறுகிறார். அவர் விஸ்வவித்யா என்ற அமைப்பின் மூலம் இதனைச் செய்து வருகிறார். ரியோ டி ஜெனிரோவுக்கு அருகே இவர் வசித்து வருகிறார்.

அருங்காட்சியகங்கள் டிஜிட்டல் மயம்: மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்த பிறகு, ஜோனாஸ் பங்குச்சந்தை நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவர் இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட வேதாந்தாவில் பயின்று கோவையில் அர்ஷா வித்யா குருகுலத்தில் 4 ஆண்டுகள் பயின்றார். அவரது முயற்சிக்கு என் வாழ்த்துகள்.நாடெங்கிலும் பல அருங்காட்சியகங்களும், நூலகங்களும் தங்களின் திரட்டுக்களை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நவம்பல் 12-இல் டாக்டர் சலீம் அலியின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாள். உலகின் பறவைகள் கண்காணிப்பாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தவர். இந்தியாவின் கலாச்சாரம் என்றும் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பவையாக உள்ளன. இதுபோல ஜோன்ஸ் மேசெட்டி, பெட்ரோபோலிஸ் என்ற இடத்தில் இந்தியாவில் கற்ற வேதத்தை மற்றவர்களுக்கு கற்பிக்கிறார். நியூசிலாந்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி., டாக்டர் கவுரவ் வர்மா, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றார்.

நவம்பர் 30–இல் ஸ்ரீகுருநானக் தேவின் 551-ஆவது பிறந்த நாளினை கொண்டாட உள்ளோம். வான்கூவர் முதல் வெல்லிங்கடன் வரை, சிங்கப்பூர் முதல் தென் ஆப்ரிக்கா வரை அவருடைய செய்தி அனைத்து இடங்களிலும் எதிரொலிக்கிறது. நவம்பர் 30-ஆம் தேதி அன்று, ஸ்ரீ குருகோவிந்த் சிங் அவர்களின் 350 -ஆவது பிறந்த நாளும், ஸ்ரீகுரு தேவ் பகதூர் அவர்களின் 400-ஆவது பிறந்த நாளும் வருகின்றன.

அரவிந்தர் மறைந்த நாள்: டிசம்பர் மாதம் 5–ம் தேதியன்று ஸ்ரீஅரவிந்தர் மறைந்த நாள். ஸ்ரீஅரவிந்தரை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்குள்ளே ஆழம் ஏற்படுகிறது.உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, ஸ்ரீஅரவிந்தரின் சுதேசிக் கோட்பாடு நம்முடைய பாதையில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தொழில்நுட்பம் வாயிலாக பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களை தொடர்பு கொள்ள முடிந்தது. நாட்டின் இளைஞர்கள் மத்தியில் இருப்பது, புத்துணர்வு, புதுசக்தியை அளிக்கும் வகையில் ஒரு நல்ல அனுபவமாக உள்ளது. பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட விவசாய சட்டங்கள், விவசாயிகள் வாழ்வில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. விவசாயிகள் கோரிக்கைகள் இன்று நிறைவேறியிருக்கன்றன. இவ்வாறு அவர் பேசினார்.


Top