logo
தமிழகத்தின் பெரும் புள்ளியின் மணல் லாரி பறிமுதல்: கெத்து காட்டிய காவல் ஆய்வாளர்.

தமிழகத்தின் பெரும் புள்ளியின் மணல் லாரி பறிமுதல்: கெத்து காட்டிய காவல் ஆய்வாளர்.

25/May/2020 12:40:01

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி, ஜேசிபி இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.பெரும் தொழிலதிபரின் லாரி என தெரிந்தும் விடுவிக்காமல் கெத்து காட்டிய காவல் ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.   

  ஆலங்குடி  அருகேயுள்ள குரும்பிவயல் அக்னி ஆற்றில் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெற்று வந்தது. இதை தடுக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன்னர் வடகாடு காவல் ஆய்வாளர் பரத் ஸ்ரீநிவாஸ் ஆற்றுக்கு செல்லும் வழியில் பெரும் பள்ளம் வெட்டி, வாகனங்கள் செல்ல முடியாதவாறு தடை ஏற்படுத்தினார். இருப்பினும், மாற்று வழியில் தொடர்ந்து, மணல் திருட்டு நடைபெற்று வந்தது.

 இந்நிலையில், நேற்று அக்னி ஆற்றில் ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பரத் ஸ்ரீநிவாஸ், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, குறும்பிவயல் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட ஜே.சி.பி இயந்திரம், லாரியை பறிமுதல் செய்தார்.

  இதுகுறித்து, வடகாடு போலீஸார்   ஜேசிபி இயந்திர ஓட்டுநர் கந்தர்வகோட்டை அருகேயுள்ள மங்களாகோவிலைச் சேர்ந்த மணிவண்ணன்(27) என்பவரை கைது செய்தனர்.

மேலும், தப்பியோடிய லாரி ஒட்டுநர் கறம்பக்குடி அருகேயுள்ள தீத்தான்விடுதியைச் சேர்ந்த கருப்பையாவை தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட லாரி தமிழகத்தில் மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெரும் தொழில் அதிபருக்கு சொந்தமான லாரி என்பது தெரியவந்தும், லாரியை விடுவிக்க கோரி பல்வேறு தரப்பிடம் இருந்து நெருக்கடிகள் வந்த நிலையிலும், லாரியை விடுவிக்காத காவல் ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Top