logo
சென்ட்ரல், எழும்பூர்  ரயிஸ் நிலையங்களின் பயணிகள் முன்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள்

சென்ட்ரல், எழும்பூர் ரயிஸ் நிலையங்களின் பயணிகள் முன்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள்

23/Nov/2020 09:46:32

சென்னை: சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் உள்ள பயணிகள் முன்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமரா மூலமாக போலி முகவர்களின் நடமாட்டத்தைக் குறைக்க முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட 6-வது நகரமாக சென்னை இருக்கிறது. இங்கு சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் முக்கிய ரெயில் நிலையங்களாக உள்ளன. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2,682 டிக்கெட்களும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் 1,020 டிக்கெட்களும் தினசரி சராசரியாக முன்பதிவு செய்யப்படுகிறது.

இங்கு முன்பதிவு செய்ய வரும், பயணிகளின் பாதுகாப்புக்காக, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் உள்ள பயணிகள் முன்பதிவு மையங்களில், கண்காணிப்பு கேரமாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்ட்ரலில் 10 கண்காணிப்பு கேமராக்கள், எழும்பூரில் 8 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியாளர் ஆர்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

தெற்கு ரெயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரை, கோவை, திருச்சி, திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய ரெயில் நிலையங்களின் முன்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை, தாம்பரம், காட்பாடி, அரக்கோணம், கோவில்பட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட மேலும் 34 ரெயில் நிலையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பயணிகள் முன்பதிவு மையங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக, போலி முகவர்கள் நடமாட்டத்தை குறைக்க முடியும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top