logo
பள்ளி செல்லாக் குழந்தைகள், இடைநின்ற மாணவர்கள்  கணக்கெடுக்கும் பணி தொடக்கம்-ஆட்சியர் தகவல்

பள்ளி செல்லாக் குழந்தைகள், இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்-ஆட்சியர் தகவல்

23/Nov/2020 07:42:27

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21 -ஆம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகள், இடை நின்ற மாணவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி கூறியதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 12-ஆம் தேதி வரை பள்ளி செல்லாக் குழந்தைகள், இடைநின்ற மாணவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி குடியிருப்புவாரியாக நடைபெறுகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 முதல் 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள், பள்ளி செல்லாக் குழந்தைகள், இடைநின்ற மாணவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பற்றிய விவரங்கள் கணக்கெடுப்பு பணியில் சேகரிக்கப்பட உள்ளன.

இக்கணக்கெடுப்பில் அனைத்து ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், செவிலியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், கிராமக் கல்விக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

 மேலும் இக்கணக்கெடுப்பை முதன்மைக்கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர் (பொ) ஆகியோர் அடங்கிய குழு களஆய்வு மேற்கொள்ள உள்ளது. தங்கள் பகுதியில் உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகள் பற்றி 97888 58839 என்ற அலைபேசி எண்ணிலும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை 97888 58842 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

Top