logo
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: நவம்பர் 23, 24 -இல்  பலத்த மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: நவம்பர் 23, 24 -இல் பலத்த மழைக்கு வாய்ப்பு

21/Nov/2020 10:42:08

சென்னை: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது:

தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது நிலவுகிறது. இது, நவம்பர் 23 -ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் உருவாகக்கூடும். இதைத்தொடர்ந்து, 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதி நோக்கி நகரக்கூடும்.

வளிமண்டய மேலடுக்கு சுழற்சி காரணமாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ.21, 22) ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். 

பலத்த மழை: நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில்    நவம்பர் 23-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மித மழையும் பெய்யக்கூடும்.

கடலூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை சிவகங்கை , ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பர் 24-ஆம் தேதி இடியுடன் பாடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், ஏனைய கடலோ மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யடும்.

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 2 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் வைப்பாரில் 100 மி.மீ., சிவகங்கை மாவட்டம் திருபுவனம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி, மதுரையில் தலா 40 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் சூரன்குடி, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், மதுரை மாவட்டம் புளிப்பாட்டியில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு அரபிக்கடல் பகுதி, மத்திய அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் இந்தப்பகுதிகளுக்கு மீனவர்கள் நவம்பர் 24-ஆம் தேதி வரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, இதுதவிர, தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் மற்தும் தமிழக கடலோரப் பகுதி களுக்கு  நவ.23- ஆம் தேதி முதல் நவ.25 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.-


Top