logo

இன்றைய சிந்தனை...தீயினால் சுட்ட புண்... நாவினால் சுட்ட வடு...

11/Nov/2020 06:07:05

நாவினால் சுட்ட வடுக்கள் ஆறுவதில்லை. நினைக்க நினைக்க காயங்கள் மேலும் மேலும் ஆழப்படத்தான் செய்கின்றன. சம்பந்தப்பட்ட தவறுகள் கூட பல சந்தர்ப்பங்களில் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் மன்னிக்கப்படுவதில்லை, மறக்கப்படுவதுமில்லை.

ஒருவர் எத்தனையோ விஷயங்களில் நல்லவராக இருக்கக் கூடும். அவர் மற்றவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கவும் கூடும். ஆனால் கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளால் மற்றவர்களை அவர் வேதனைப் படுத்து வாரேயானால் அத்தனை நன்மைகளும், உதவிகளும் மங்கிப் போகும். பேசிய அந்த கடுஞ்சொல் மட்டுமே பிரதானமாக நிற்கும்.

இது குடும்பத்திற்குள்ளும், உறவினர் களுக்குள்ளும் மட்டும் பூதாகரமாகும் ஒரு பிரச்சினை அல்ல. அக்கம் பக்கத்திலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும் கூட நம் அமைதியை நிர்ணயிக்கும் ஒன்றாக இருந்து விடுகிறது. ஒருசில நிமிடங்களில் மறந்து விடக்கூடிய எரிச்சல் மிகுந்த சந்தர்ப்பங்களைக் கூட சுடுசொற்களால் பெரிய விஷயமாக்கிக் கொள்கிற எத்தனையோ உதாரணங்களை நம் தினசரி வாழ்க்கையில் காண முடியும்.

அதற்கென்று யார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டே போக வேண்டியதில்லை. நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை சகித்துக் கொண்டே இருந்து விடத் தேவையில்லை. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், உறுதியுடன் நம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டியதும் சில நேரங்களில் அவசியமாகவே இருக்கின்றது.

அது போன்ற சந்தர்ப்பங்களில் சொல்ல வேண்டியதை உறுதியாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள். ஆனால் வார்த்தைகளில் விஷம் வேண்டாம், விஷமமும் வேண்டாம். சொல்வது நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் அது அப்போது ஒத்துக் கொள்ளப் படாவிட்டாலும் கூட சம்பந்தப் பட்டவர்களால் உணரப்படும். அப்போது சற்று சங்கடமாக இருந்தாலும் சீக்கிரமாகவே மறக்கப்படும்.

ஆனால் வார்த்தைகளில் விஷம் தோய்ந்திருக்கு மானால் சொல்கின்ற செய்தி உண்மையாகவே இருக்குமானாலும் அது ஆறாத வடுவாக அடுத்தவர் மனதில் தங்கி விடும். நீண்ட பகைமை பிறந்து விடும்.சிலர் பேசுவதை எல்லாம் பேசி விட்டுப் பின்னர் ஏதோ ஒரு கோபத்தில் சொன்னதை எல்லாம் பெரிது படுத்துவதா என்று இறங்கி வரக்கூடும்.

ஆனால் கேட்டு வேதனைப்பட்டவர்கள் அதில் சமாதானமாக முடிவது கஷ்டம் தான். கோபம் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. எனவே திருப்பி வாங்க முடியாத வார்த்தைகளைப் பேசாமலேயே இருப்பது தான் அறிவு.

எல்லோரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவக்கூடிய நிலையில் இருக்கக் கூடும். அல்லது நம்மை பிரச்சினைக் குள்ளாக்க முடிந்த நிலையில் கூட இருக்கக் கூடும். அந்த நேரத்தில் நாம் பேசிய கடுமையான வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்கு நினைவு வரக்கூடுமானால் நமக்கு அவர்களால் பெரும் நஷ்டமே நேரக்கூடும்.

எனவே வார்த்தைகளால் ஜெயித்து விட்டு வாழ்க்கையில் தோற்றுப் போகாதீர்கள். வார்த்தைகளைத் தீட்டுவதற்குப் பதிலாகப் புத்தியைத் தீட்டுங்கள். குத்தல் பேச்சும், கிண்டல் பேச்சும் அந்த நேரத்தில் நன்றாகத் தெரியலாம். கூட இருப்பவர்களிடம் ’சபாஷ்’கூடப் பெறலாம். ஆனால் அந்தப் பேச்சால் முக்கியமான மனிதர்களை இழந்து விட்டால், இடையே உள்ள அன்பு முறிந்து விட்டால் உண்மையில் நமக்கு நஷ்டமே என்பதை என்றும் மறக்காதீர்கள் 


Top