logo

இன்றைய சிந்தனை.. அறிவியலும்... மூடநம்பிக்கைகளும்...

03/Nov/2020 07:37:26

உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகள் என்பது இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான மூடநம்பிக்கைகள்.ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்றும் அதிக மூடநம்பிக்கைகள் இருக்கும் நாடாக இந்தியாதான் இருக்கிறது. இன்றும் இந்தியாவில் எண்ணிலடங்கா மூடநம்பிக்கைகள் இருக்கிறது.

நாம் அறிவியலில் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளோம். செவ்வாய் கிரகத்திற்கு கூட விண்கலத்தை அனுப்புகின்ற அளவிற்கு நமது தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால், நாம் அறிவிற்கு ஒவ்வாத பழைய பழக்கங்கள் என்று கூறி, சிலவற்றை பின்பற்றுவதன் விளைவாக, நமது கால நேரம் விரயமாவதோடு மட்டுமல்லாமல், நமக்கு ஏராளமான வருத்தங்களும் உருவாகின்றன. அறிவியலை அறிந்த நாம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டோமா. என்றால் இல்லையென்றே கூற வேண்டும்.

பேய்: பேய் பிடித்து விட்டது என்று சொல்லி மந்திரவாதிகளை அழைத்து வந்து, தொடர்புடையவர்களை சாட்டையால் அடித்து பேயை விரட்டுவதாகக் கூறுகிறார்கள். பேய் என்பது மின்சாரம் இல்லாத காலத்தில், இருட்டாக இருந்த போது வந்த பயம். படித்தவர்களை பேய் பிடிக்கிறதா, மருத்துவர்களை, அதிகாரிகளைப் பேய் பிடிக்கிறதா  இல்லையே. மனநலம் பாதிப்பு என்றால் மந்திரவாதிகளிடம் போகாமல், மனநல மருத்துவரிடம் போக வேண்டும். இதுதான் அறிவியல்.

ஜோதிடம்:  பல குடும்பங்களில் குழப்பத்தை உருவாக்குவதே இந்த ஜோதிடம் தான், ஜோதிடத்தின் அடிப்படையே தவறு. சூரியன் மையமாக உள்ளது. பூமி உள்பட 8 கிரகங்கள் சூரியனைச் சுற்றுகின்றன என்று கூறுவதுதான் அறிவியல். அதுதான் நிரூபிக்கப்பட்டதும் கூட. ஆனால், ஜோதிடத்தில் பூமி மையமாகவும், சூரியன் உள்பட, ராகு கேது போன்ற இல்லாத கோள்கள் எல்லாம் பூமியைச் சுற்றுகின்றன என்று கூறுவதுதான் ஜோதிடம்.

அறிவியல் படித்த நாம் இந்த ஆதாரமில்லாத கற்பனையை ஏற்றுக் கொண்டு நம் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளலாமா, சற்று ஆலோசனை செய்யுங்கள். இன்றைக்கு குடும்பநல நீதிமன்றங்களுக்கு வரும், வழக்குகளில் தொடர்புடைய கணவன் மனைவியர் ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்துதானே திருமணம் செய்திருப்பார்கள். பிறகு ஏன் இந்த நிலை, நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா, சற்று ஆலோசனை செய்யுங்கள்.

வாஸ்து: வாஸ்து சரியில்லை என்று கூறி, கடன் வாங்கி செலவு செய்து கட்டிய வீட்டை மாற்றி மாற்றி இடித்துக் கட்டி, பணத்தை வீணாக்குகிறார்களே, இது சரியா. வீட்டில் கழிப்பறை கட்டுவது கூட வாஸ்துவுக்கு எதிரானதுதான், நாம் அதற்காக கழிப்பறை கட்டாமல் விட்டு விடுகிறோமா, இல்லையே. வாஸ்து பார்த்து கட்டிய கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஏன் இடிந்து விழுகின்றன, நாம் ஆலோசிக்க வேண்டாமா. அனைத்தும் அவனவன் தலைவிதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்கிறார்கள். அப்படி என்றால், பிறகு எதற்கு ஜோதிடம். எதற்கு வாஸ்து..எதற்கு பரிகாரம்.. சற்று ஆலோசனை செய்யுங்கள்.

நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறுகிறார், ஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியவை அல்ல.பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை, நவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்ததால் தான் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 2 மடங்காக உயர்ந்துள்ளது. சுற்றியிருக்கும் உலகத்தை நம்பிக்கையின் அடிப்படையில்  பார்க்காமல் அறிவியல் பூர்வமாகப் பார்க்க வேண்டும்  என்கிறார்...

ஆம் நண்பர்களே,அறிவியல் அறிவு நம் எல்லோரிடமும் உண்டு, ஆனால், அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள நம்மில் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அதற்கு நம் மனதின் பயம் தான் காரணம். பயத்தை விட்டொழிப்போம். அறிவுள்ள சமுதாயம் படைப்போம். 


Top