logo
நலவாரியத்தை செயல்படுத்த கோவில் பூசாரிகள் நலச்சங்கம் கோரிக்கை

நலவாரியத்தை செயல்படுத்த கோவில் பூசாரிகள் நலச்சங்கம் கோரிக்கை

31/Oct/2020 05:14:25

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை காடப்பிள்ளை அய்யனார் கோவில் வளாகத்தில் மாவட்டத்தலைவர்கள் எஸ். பழனிவேல், எஸ். பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்று(31.10.2020)  நடைபெற்ற  மாவட்ட கோவில் பூசாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் இக்கோரிக்கை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத்தலைவர் பி. வாசு பேசியதாவது:

தமிழக அரசு 17 நலவாரியங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், பூசாரிகள் நலவாரியத்தை மட்டும் கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாத நிலை நீடித்து வருகிறது. எனவே, தமிழக அரசு பூசாரிகள் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். பூசாரிகள் ஓய்வூதியம், திருக்கோயில் பணியாளர் ஓய்வூதியத்தை ரூ.3000-ஆக  உயர்த்தி சட்டப்பேரவையில் விதி110 -இன் கீழ் தமிழக முதல்வர் அறிவித்தார். 

 உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்துக்கான அரசாணையில் திருக்கோயில் பணியாளர்களுக்கு மட்டுமே குறிப்பிடப்பட்டு 3 மாதங்களாக அந்த ஓய்வூதியம் ரூ.3000 ஆயிரத்தை பெற்று வருகின்றனர்.  ஆனால், பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகவே,  திருக்கோவில் பணியாளர்களுக்கு எந்தத்தேதியில் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டதோ அதே தேதியிலிருந்து  உயர்த்தி  நிலவையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்க அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு  மாவட்டம்தோறும்  வழிபாட்டு பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும்.

கொரோனா ஊரடங்காலும், நோய்த்தொற்று காரணமாகவும் தமிழகம் முழுவதும்  பல திருக்கோவில்களில் கொடை, இதர விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தட்டுக்காணிக்கை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வரும்  பூசாரிகள் படும் சிரமத்தைப் போக்கும் வகையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்  வகையில் திருக்கோவில் நிதியிலிருந்து கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் ரூ.5000 வழங்க வேண்டும்.

இது தொடர்பாக கடந்த 12.10.2020 -அன்று தமிழக முதல்வருக்கும் ஆணையருக்கும் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட மனு மீது உரிய நடவடிக்கை  எடுத்து நிதியுதவி அளிக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுபபாட்டில்  பணியாற்றிவரும் பூசாரிகளுக்கும் அர்ச்சகர்களுக்கும்  பணிப்பாதுகாப்பு, மாத ஊதியம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அடையாள அட்டை வழங்க முன் வரவேண்டும் என்றார் பி. வாசு.

கூட்டத்தில், மாவட்டச்செயலர்கள் எஸ்.வி. சுப்புராமன், ஏ. கண்ணாயிரம், ஒன்றிய நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Top